வெள்ளப்பெருக்கினால் நீரில் மூழ்கிய புதுச்சேரி கொமந்தான்மேடு தரைப்பாலம்!
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் புதுச்சேரி - கடலூர் மக்கள் செல்வதற்கான போக்குவரத்து முடங்கியதால் 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி பகுதியான பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. இதனால் இங்கு விநாடிக்கு சுமார் பத்தாயிரம் கன அடி நீர் கடலில் கலந்து வருகிறது. தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் புதுச்சேரி-கடலூர் பகுதியை இணைக்கும் கொமந்தன்மேடு தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.
இதன் காரணமாக புதுச்சேரி - கடலூர் மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க, இருமாநில போலீசார் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க, பாகூர் தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தலைமையில், மணல் மூட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.
மேலும் அணையின் கரைகளை பலப்படுத்தும் பணியும் முழு வீச்சாக நடக்கிறது. இதனால் கரையோர பகுதியில் உள்ள கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர், சோரியாங்குப்பம், சின்ன ஆராய்ச்சிகுப்பம், பெரிய ஆராய்ச்சி குப்பம், கொமந்தான்மேடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்குவதற்காக அங்குள்ள பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர்.
கரையோர மக்கள் பாதுகாப்பாக பள்ளியில் தங்கிக் கொள்ள பாகூர் தாசில்தார் பிரதீவ் கேட்டுக் கொண்டுள்ளார். மழையால் ஆற்றுக்கரையோர பாதிப்பு இருந்தால் இலவச தொலைபேசி எண்களான 1070, 1077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.