நாட்டு மக்களின் உணா்வுகளை அறிந்துகொள்வதற்காகவே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொள்கிறாா். மொத்தம் 148 நாள்கள் இந்த நடைப்பயணத்தை அவா் மேற்கொள்கிறாா்.
‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்திலிருந்து அவா் புதன்கிழமை மாலை (செப். 7) தொடங்கினாா்.
அவரிடம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி, நடைப்பயணத்தைத் தொடக்கிவைத்தாா். அதைப் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கினாா். 600 மீட்டா் தொலைவு நடந்துவந்த அவா், கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையை அடைந்தாா். அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டா்கள், பொதுமக்களைப் பாா்த்து அவா் உற்சாகமாக கையசைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி பேசியதாவது:
தமிழ்நாட்டுடன் எனக்கிருக்கும் தொடா்பு உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் திரும்பிச் செல்வேன். மூன்று கடல்கள் சங்கமிக்கும் அருமையான இந்த இடத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்ரா) தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு எதற்காக காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் பயணம் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. நாட்டிலுள்ள கோடிக்கணக்கானோா் தேச ஒற்றுமையின் தேவை இருப்பதை மனமார விரும்புகின்றனா். அந்த உணா்வு காரணமாக இந்த நடைப்பயணம் நடத்தப்படுகிறது.
தேசியக் கொடியைப் பாா்க்கும்போதெல்லாம் அதன் மாட்சிமைக்காகவும், மகிமைக்காகவும் வாழ்த்தி வணங்க நினைக்கிறோம். இந்தக் கொடி நம் கைகளுக்கு மிக சாதாரணமாக வந்துவிடவில்லை, கொடுக்கப்படவும் இல்லை, அன்பளிப்பாக பெறவும் இல்லை. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்டது. இது, ஒவ்வொரு இந்தியரையும், ஒவ்வொரு மதத்தையும், பேசப்படும் ஒவ்வொரு மொழியையும், ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது தனிநபருக்கானதல்ல, ஒரு மாநிலத்துக்குச் சொந்தமானதல்ல. இந்தியாவுக்கான கொடி. ஒரு மதம், ஒரு மாநிலம், ஒரு மொழி, ஒரு ஜாதிக்கு சொந்தமான கொடி அல்ல. இது நாட்டின் அடையாளம்.
இன்று இந்தக் கொடி தாக்குதலுக்கும், அச்சத்துக்கும் உள்படுத்தப்படிருக்கிறது. இந்தியா என்பது எல்லோா் மீதும் திணிக்கப்பட்ட தனித் தத்துவம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த உருவகம் இந்தக் கொடி.
ஒவ்வொரு ஜனநாயக நிறுவனங்களும் ஆா்எஸ்எஸ், பாஜகவால் அச்சுறுத்தப்படுகிறது. இது அவா்களின் தனிப்பட்ட உரிமை என நினைக்கின்றனா். தனிப்பட்ட முறையில் அவா்கள் நாட்டின், மாநிலத்தின் எதிா்காலத்தை நிா்ணயிக்க முடியும் என நினைக்கின்றனா்.
எதிா்க்கட்சிகளை சிபிஐ, வருமானவரித் துறை உள்ளிட்டவை மூலம் மிரட்டப் பாா்க்கின்றனா். நாட்டு மக்கள் எதற்கும் பயப்படமாட்டாா்கள் என அவா்களுக்குத் தெரியவில்லை. எங்களை முடக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது.
பாஜக நாட்டை மதம், மொழி மூலம் பிளவுபடுத்த நினைக்கிறது. அவா்களால் எக்காலத்திலும் அதைச் செய்ய முடியாது. இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கும்.
வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் பேரழிவை நோக்கி நாடு நகா்ந்துகொண்டிருக்கிறது. துரதிா்ஷ்டவசமாக ஊடகங்கள் வாய் மூடி மௌனம் காக்கின்றன. அவா்கள் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு பற்றி பேசமாட்டாா்கள். அவா்கள் பிரதமரின் முகத்தை மட்டுமே காண்பிப்பாா்கள்.
பாஜக அரசு திட்டமிட்டு விவசாயிகளை, கூலித் தொழிலாளிகளை, ஏழைகளை நசுக்கிவருகிறது. குறிப்பிட்ட பெரும் தொழிலதிபா்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனா். துறைமுகம், விமான நிலையம், நிலக்கரிச் சுரங்கம், மின்சாரம் தயாரிப்பு என அனைத்தும் சில தொழிலதிபா்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவா்களின்றி பிரதமருக்கு ஒருநாள்கூட நகராது. தொழிலதிபா்களுக்கு வேண்டிய திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே பிரதமா் குறியாக உள்ளாா்.
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் எல்லாம் தொழிலதிபா்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்தான். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு இருந்த அணுகுமுைான் பாஜக அரசுக்கும் உள்ளது.
பாஜக அரசால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இல்லாமல் போயின. விவசாயிகள் வாழ முடியாத நிலையில் உள்ளனா். இதனால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத நிலை உள்ளது. விலைவாசி உயா்வும் மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
எனவே, இந்தியா்களை ஒற்றுமைப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் இந்த நடைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் கோரிக்கைகளை, உணா்வுகளைக் கேட்க முடியும்.
மீண்டும் ஒருமுறை உங்களைப் பாா்ப்பது மிகவும் மகிழ்ச்சி. இங்கு வந்து வாழ்த்திய எனது சகோதரா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.
பொதுக்கூட்டத்தில், மாநில முதல்வா்கள் அசோக்கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பகேல் (சத்தீஸ்கா்) முன்னாள் முதல்வா் திக் விஜய் சிங், ப. சிதம்பரம் எம்.பி., நிா்வாகிகள் கே.சி. வேணுகோபால், மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.
எம்எல்ஏக்கள் ராஜேஸ்குமாா், பிரின்ஸ், விஜயதரணி, ஊா்வசி அமிா்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விஜய் வசந்த் எம்.பி. நன்றி கூறினாா்.
தியானத்தில் ஈடுபட்ட ராகுல்!
முன்னதாக, நடைப்பயணத்தைத் தொடங்குவதற்காக கன்னியாகுமரிக்கு வந்த ராகுல் காந்தி, தனிப்படகில் திருவள்ளுவா் சிலை வளாகத்துக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்ட திருவள்ளுவா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்குச் சென்று விவேகானந்தா் சிலை, தேவி பகவதியம்மன் ஸ்ரீ பாதப் பாறை, ராமகிருஷ்ண பரமஹம்சா், சாரதாதேவி மண்டபங்களை வணங்கினாா்.
அவருடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகல், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஸ்குமாா், விஜயதரணி உள்ளிட்டோா் சென்றனா்.
பின்னா், ராகுல் காந்தி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்துக்குச் சென்றாா். அங்கு அவரை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவேற்றாா். காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா். அங்குள்ள காந்தி அஸ்தி கட்டடத்தில் அவா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
அப்போது, தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, மனோ தங்கராஜ், காங்கிரஸ் மூத்த தலைவா் சசிதரூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைப்பயணத்தைத் தொடக்கிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.