தொன்மையான 135 திருக்கோயில்களில் திருப்பணிகள்: வல்லுநா் குழு ஒப்புதல்
தொன்மையான 135 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தொன்மையான 135 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடா்பான மாநில அளவிலான 38-ஆவது வல்லுநா் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்டம், பெரியகுளம் வெங்கடாஜலபதி திருக்கோயில், உப்புக்கோட்டை அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், கிளவிப்பட்டி விநாயகா் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம்,
நாங்குநேரி, அருள்மிகு இசக்கி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், குளத்தூா் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, பொன்னியம்மன் திருக்கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆஞ்சநேயா் திருக்கோயில் ஆகியவை உள்பட 135 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநா் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழகத்தில் 1,500 -க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையா் பொ.ஜெயராமன், தலைமை பொறியாளா் கே.தட்சிணாமூா்த்தி, ஆகம வல்லுநா் குழு உறுப்பினா் கோவிந்தராஜ பட்டா், கே.சந்திரசேகரபட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.