போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையைக் கொன்ற மகன்!
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்து, தந்தையின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த மகன் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்து, தந்தையின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த மகன் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
சேதுபாவாசத்திரம் காவல் சரகம் கூடலிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி(50) விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டாம். இவருக்கு மனைவி, மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. குடிப்பழக்கத்தால் இவருக்கும் இவரது மனைவி எலிசபெத்க்கும் தினசரி சண்டை நடக்குமாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ராபர்ட் கென்னடிக்கும் அவரது மனைவி எலிசபத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மூத்த மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸ் (24) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இருந்தும் நீண்ட நேரமாக சண்டை தொடர்ந்து கொண்டே இருந்ததாம், இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய அருள் வில்டன்ஸ் தந்தையைக் கண்டித்துள்ளார், இதனால் தந்தை மகன் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் ராபர்ட் கென்னடி அருகில் கிடந்த கட்டையை எடுத்து மகனைத் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தந்தை ராபர்ட் கென்னடியின் தலையில் போட்டதில் ரத்த வெள்ளத்துடன் துடிதுடித்து ராபர்ட் கென்னடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராபர்ட் கென்னடியின் சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எலிசபெத் புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி வழக்குப் பதிவு செய்து மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸை கைது செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். மகனே தந்தையின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.