திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்திடவும், கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்திடவும் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை (செப். 17) கடற்கரை சுத்தம் செய்யும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 75 முக்கிய கடற்கரைப்பகுதிகளை சுத்தப்படுத்திடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக்கழகம், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், விஞ்ஞான் பிரசார், மத்திய அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவுசார் தொழில்நுட்ப மையம் இணைந்து தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் என்பதை வலியுறுத்தி தமிழக கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.
இதற்கான விழா திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக புதன்கிழமை (செப். 14) தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை (செப். 15) திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் விஸ்டம் பள்ளி மாணவர்கள் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியை தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் சாந்தகுமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவுசார் தொழில்நுட்ப மையத்தின் வழிநடத்தும் விரிவுரையாளர் ஜி.சுடலை, காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதன்மை முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, விஸ்டம் பள்ளி முதல்வர் சுலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆலந்தலை பங்குதந்தைகள் ஜெயக்குமார், பாலன், ஊர் நலக்கமிட்டி தலைவர் ரமேஷ், ஆலோசகர் ஜாண்சன், காஞ்சி பள்ளி முதல்வர் ஷீனத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றியதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். முடிவில் காஞ்சி பள்ளி நிர்வாக அலுவலர் கிஷோர்பாபு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.