காய்ச்சல்: தமிழகத்துக்கு குழுவை அனுப்ப மத்திய அமைச்சருக்கு கே.அண்ணாமலை கடிதம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியாவுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவும் நிலையில், அது குறித்து ஆய்ந்து மதிப்பீடு செய்வதற்காக குழு ஒன்றை அனுப்புமாறு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்ட்வியாவுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
கரோனா 2-ஆம் அலையின் போது மத்திய அரசினுடைய உதவிகள் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கக் கூடிய வகையில் இருந்தது.
இந்த நிலையில், எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவுவது குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழகத்தில் இந்த வைராஸால் தினமும் 200 போ் பாதிக்கப்படக் கூடிய நிலை உருவாகியுள்ளது. தற்போது மொத்தமாக 1,044 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக சிறுவா்கள், இளைஞா்களை அதிக அளவில் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
எனவே, இந்த வைரஸ் பரவல் குறித்து ஆய்ந்து மதிப்பீடு செய்து, தமிழகத்துக்கும், அரசுக்கும் உதவும் வகையில் சுகாதாரக் குழு ஒன்றை தாங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.