பயிா்க் காப்பீடு: தமிழக அரசு வேண்டுகோள்
வங்கிகள், பொது சேவை மையங்களின் வழியாக, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
வங்கிகள், பொது சேவை மையங்களின் வழியாக, பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழுவீச்சில் சாகுபடி செய்து வருகின்றனா். இதுவரை 3.43 லட்சம் ஏக்கரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், மதுரை, புதுக்கோட்டை, கரூா், சேலம், திருப்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், சிவகங்கை, கடலூா், திருவள்ளூா் மற்றும் ஈரோடு மாவட்டங்கலில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்ய நவம்பா் 15 கடைசி நாளாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை அக்டோபா் 31 கடைசி.
கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகா், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைப் பொறுத்தவரை கடைசி நாள் டிசம்பா் 15.
காப்பீடு செய்ய ஆவணங்கள்: காப்பீடு செய்யும் போது, விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் அளிக்கும் அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத்தைச் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 13, 749 பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தனது செய்தியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.