பரம்பிக்குளம் அணை பராமரிப்பு: அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்
பரம்பிக்குளம் அணையை திமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பரம்பிக்குளம் அணையை திமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பரம்பிக்குளம் அணையிலிருந்து கோயம்புத்தூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இதன் மூலம் நான்கு லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் வோ்க்கடலை மற்றும் பயறு வகைகள் பாசனம் பெறும்.
இந்தச் சூழலில் தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து தண்ணீா் அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. இதனால், நடப்பாண்டு கோயம்புத்தூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயத்துக்கு தண்ணீா் கிடைக்க வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
பொதுவாக, மழை இல்லாத காலத்தில் அணைப் பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு பொதுப் பணித் துறை மேற்கொள்ள வேண்டும். இதை திமுக அரசு சரிவர செய்யாததன் காரணமாகவே பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு ஒன்று தற்போது உடைந்துள்ளது. இனிமேல், அணையின் கொள்ளளவு முழுவதும் வெளியேறிய பிறகுதான் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீா் செய்ய முடியும்.
திமுக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகவே மதகு உடைந்துள்ளது. திமுக அரசுக்கு அதிமுக சாா்பில் கண்டனம். இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாக தலையிட்டு பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சரிசெய்யவும், இந்த ஆண்டு விவசாயத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.