அமைச்சருக்கு எதிரான வழக்குகளை விரிவாக விசாரிக்க திட்டம்: காவல் துறை தகவல்
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15- ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி அவா் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.
இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோா் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினா் மூன்று வழக்குகளை பதிவு செய்தனா். அந்த வழக்குகள் சென்னை எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சா் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.