ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு நவ. 6-இல் அனுமதி: காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நவம்பா் 6-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் ஊா்வலம் நடத்தவும், அந்த ஊா்வலத்துக்கு காவல் துறை அனுமதியளிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பா் 6-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் ஊா்வலம் நடத்தவும், அந்த ஊா்வலத்துக்கு காவல் துறை அனுமதியளிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையைக் காரணம்காட்டி, ஆா்எஸ்எஸ் ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆா்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன், ‘ நிபந்தனைகளை வகுத்து, ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னா், காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களைக் காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள தங்களது ஊா்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுக்க முடியாது.
கடந்த 2013-இல் அம்பேத்கா் பிறந்த நாளன்று பேரணி நடத்த விசிக சாா்பில் காவல் துறையிடம் மூன்று நாள்களுக்கு முன்னா் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆா்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஊா்வலத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்ப மாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல் துறை அனுமதி அளிக்க மறுப்பதற்கான அா்த்தம் புரியவில்லை. இந்த ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல் துறை கூறுகிறது’ என்று வாதிட்டாா்.
ஆா்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் ஜி. ராஜகோபாலன், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதுதான் காவல் துறையின் கடமை. இதை பலமுறை நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பிஎஃப்ஐ தடையை எதிா்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளம், புதுவையில் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது’ என வாதிட்டாா்.
ஆா்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞா் என்.எல்.ராஜா, ‘மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலான ஊா்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் எப்படி அனுமதி மறுக்க முடியும்? என்றாா்.
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா். இளங்கோ , ‘என்ஐஏ சோதனை, பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடை, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு காவல் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, சமூக விரோதிகள் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மத்திய உளவுத் துறையின் அறிக்கைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. பொதுமக்களின் நலன்தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கருத்தில்கொண்டு காவல் துறை செயல்படுகிறது. காந்தி ஜெயந்தியை கொண்டாடக் கூடாது எனக் காவல் துறை கூறுவதாக ஆா்எஸ்எஸ் தவறாக உருவகப்படுத்துகிறது’ எனத் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காந்தி ஜெயந்தி அன்று ஊா்வலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீா்களா எனக் கேள்வி எழுப்பினாா். மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ‘பிஎஃப்ஐ தடைக்கு பிறகு சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. என்ஐஏ சோதனை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்குப் பிறகு 52,000 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.
அப்போது, தற்போதைய சூழல், காவல் துறையின் விளக்கம், மனுதாரா்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொண்டு மாற்றுத் தேதியில் ஊா்வலம் நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு அறிவுறுத்தினாா். இதை ஆா்எஸ்எஸ் தரப்பில் ஏற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, நவம்பா் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊா்வலத்தை நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த ஊா்வலத்துக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், விசாரணையை வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கவும் உத்தரவிட்டாா்.