முகப்பு
தமிழ்நாடு

அறிவியல் கண்டுபிடிப்பு: வாழப்பாடி அரசுப் பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டு!

அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்ற வாழப்பாடி அரசுப்பள்ளி மாணவி தமிழகத்தில் இருந்து முதன்முறையாக விருதும், மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Updated On : 19 செப்டம்பர், 2022 at 2:50 PM
வாழப்பாடி அரசு பள்ளி மாணவி இளம்பிறைக்கு விருது வழங்கி பாராட்டிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயேந்திர சிங் மற்றும் உயரதிகாரிகள்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:52 PM

தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான, மாணவ- மாணவியருக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்ற வாழப்பாடி அரசுப்பள்ளி மாணவி, தமிழகத்தில் இருந்து முதன்முறையாக விருதும், மூன்றாம் பரிசும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் தலைநகர் புதுதில்லி பிரகதி மைதானத்தில் கடந்த வாரம் தேசிய அளவிலான பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இடையேயான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதும் 576 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் உள்பட 13 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த, முடி திருத்தும் தொழிலாளி மதியழகன் - சத்தியபிரியா தம்பதியரின் இளைய மகளான, வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து இளம்பிறை (16). பங்கேற்றார். இவர் தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி வடிவமைத்து, செயல் விளக்கமளித்த, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் இயந்திரத்தில் விபத்துக்களைத் தடுக்கும் கருவி, தேர்வுக்குழுவின் கவனத்தைப் பெற்றது.

Advertisement

இந்த புதிய கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவிலான 'இன்ஸ்பயர் மனாங்' விருதும், மூன்றாம் பரிசும் கிடைத்தது. தமிழகத்திலிருந்து தேசிய அளவிலான இந்த விருதை மாணவி இளம்பிறை முதன் முறையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். புதுதில்லியில் விஞ்ஞான்பவன் வளாகத்தில் 16ந்தேதி நடைபெற்ற விழாவில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெயேந்திர சிங், மாணவி இளம்பிறைக்கு இந்த விருதினை வழங்கி பாராட்டினார். 

தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று தமிழகத்திற்கும், வாழப்பாடி அரசுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி இளம்பிறைக்கு கல்வித்துறை உயரதிகாரிகள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரிய,  ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை, பசுமை அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளன.

விருது பெற்ற மாணவி இளம்பிறை நமது செய்தியாளரிடம் கூறியதாவது: 'தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில், புதுதில்லிக்குச் சென்று பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது பெருமிதமாக உள்ளது. என்னை ஊக்கப்படுத்தி விருது பெறுவதற்கு உதவிய எனது பெற்றோர்கள், சகோதரி, பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

நல்ல முறையில் கல்வி பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவதே எனது எதிர்கால லட்சியம். இருப்பினும் மக்களுக்கு ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்த புதிய கண்டுபிடிப்புகளையும் தொடர்வேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.