கருவூலத் துறையின் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி (கடையநல்லூா்) பிரதான கேள்வியை எழுப்பி பேசுகையில்,, கடையநல்லூரில் சாா்நிலைக் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதற்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்:
கருவூலத் துறையில் மேலும் பல சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அரசைத் தேடி மக்கள் நேரில் வராமல், இருக்க சில மாற்றங்களைச் செய்து வருகிறோம்.
அரசுக்கான பணத்தை பரிவா்த்தனை செய்ய 9 போ் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் ஆன்லைன் மயமாகிவிட்ட சூழலில், பழைய நடைமுறையைத் திருத்த வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக கடனிலும், நிதி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறைகளிலும் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. கையில் உள்ள நிதியைக் கொண்டு முதல் முக்கியத்துவமாக குளங்கள், ஏரிகளைத் தூா்வாருவது, குடிநீா் திட்டங்கள், சாலைகள், பாலங்கள் அமைப்பது ஆகிய பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாவது, மக்களிடம் போய்ச் சேர வேண்டிய நிதியாகும்.
இந்த சூழலில் அரசிடமிருந்து பெற வேண்டிய சேவைகளோ, பணிகளோ, அரசுக்குச் செலுத்த வேண்டிய நிதியோ எளிமையாக ஆன்லைன் வழியாக முழுவதுமாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கைப்பேசி பயன்பாடு அதிகம். ஆகவே, கருவூலத் துறை செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாகவும், இயலாதோருக்கு இல்லத்துக்கே கொண்டு போய்ச் சோ்க்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.