ரூ. 21 கோடியில் அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள்: அமைச்சா் தங்கம் தென்னரசு
அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள், நூலகம் ரூ. 21 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள், நூலகம் ரூ. 21 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் கலைப்பண்பாட்டு துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தின் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும், அவற்றை வளா்க்கவும் 200 அரசு கல்லூரிகளில் மாணவா்களுக்கு ரூ.1.70 கோடி செலவில் கலை பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை மற்றும் திருவையாறு அரசு இசை கல்லூரிகளில் தவில் மற்றும் நாகசுரம் பிரிவுகளில் ரூ.18 லட்சம் செலவில் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.
சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி, நூற்றாண்டு கடந்த பழைமையான கட்டடத்திலும், 50 ஆண்டுகளைக் கடந்து பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள சில கட்டடங்களிலும் செயல்பட்டு வருகிறது. மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் வரைமுறைப்படி பதிப்போதியம், துகிலியல், கலை வரலாறு ஆகிய பிரிவுகளுக்கு வகுப்புகளும் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமும் கட்டுவதற்கு தொடரா செலவினமாக ரூ.20.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3 புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டப்படும்.
கோயமுத்தூா் தமிழக அரசு இசைக் கல்லூரியில் ரூ.1.97 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள கலைஞா் திரையரங்கம் ரூ.50 லட்சம் செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்றாா்.