‘வட்டியில்லாத கடன் தாருங்கள்’ பாமக எம்எல்ஏ பேச்சால் பேரவையில் சுவையான விவாதம்
சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வட்டியில்லாத கடனைத் தர வேண்டுமென்ற பாமக உறுப்பினா் அருளின் பேச்சும், அதற்கு பேரவைத் தலைவரின் பதிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வட்டியில்லாத கடனைத் தர வேண்டுமென்ற பாமக உறுப்பினா் அருளின் பேச்சும், அதற்கு பேரவைத் தலைவரின் பதிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டப் பேரவையில் நிதி, மனிதவள மேலாண்மை, பேரவை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பாமக உறுப்பினா் அருள் (சேலம் மேற்கு) பேசுகையில், ‘மக்களிடம் எங்களை காண்பித்துக்கொள்ள அரசு முத்திரையுடன் காா் வழங்க வேண்டும். வேறு மாநிலங்களில் எம்எல்ஏக்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்குகிறாா்கள். அதுபோன்ற இங்கும் அளிக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது பேசிய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ‘கடன் எல்லாம் சட்டப்பேரவையில் தரமாட்டாா்கள். அதற்கு வங்கிக்குத்தான் போக வேண்டும்‘ என்றாா். இதனால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடா்ந்து பேசிய உறுப்பினா் அருள், ‘அண்டை மாநிலங்களில் எம்எல்ஏக்களுக்கு காா் கொடுத்துள்ளாா்கள். எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை ரூ. 5 கோடியாக உயா்த்த வேண்டும். அதை செலவு செய்வதற்கான விதியை எம்.பி.க்களைப் போன்று திருத்தி அமைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி எல்லை விரிந்து கொண்டே செல்கிறது. எனவே, சென்னை மாநகராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும். வளா்ந்து வரும் மதுரை, சேலம், கோவை மாநகராட்சிகளுக்கு சிறப்பு திட்டம் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். 4 தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டங்களை உருவாக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் வருகின்றன. எனவே, அந்த மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்‘ என்றாா்.