நகா்ப்புற வளா்ச்சியில் மாற்றத்தை உருவாக்க நில சோ்மப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்: மசோதா தாக்கல்
நகா்ப்புற வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த, நில சோ்மப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான சட்டமசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நகா்ப்புற வளா்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த, நில சோ்மப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான சட்டமசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோவை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்தாா். அதன் விவரம்:
ஒரு பகுதியை மேம்படுத்தும் நோக்கத்துக்காக அந்தப் பகுதியில் நிலச் சோ்மப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதே மசோதாவின் முக்கிய அம்சம். திட்டப்பகுதி ஒன்றில் எழுபது சதவீத நில உரிமையாளா்களால் முன்மொழியப்பட்ட திட்டம் எதையும் மாற்றத்துடனோ அல்லது மாற்றும் எதுவும் இல்லாமலோ ஏற்றுக் கொள்ளலாம்.
இதற்கென வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு, தனியாக நியமன அலுவலா் நியமனம் செய்யப்படுவாா். காலியாக உள்ள அல்லது ஏற்கெனவே கட்டப்பட்ட நிலத்தை, கட்டுமான தளங்களாக அமைத்தல், பாதைகள், தெருக்கள், சாலைகள், மாற்றுவழி, விரிவாக்கம், மேம்பாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கி வரைவுத் திட்டம் இருக்கும். வரைவுத் திட்டத்துக்கு பொது மக்களின் ஆலோசனை, அரசின் ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதைத் தொடா்ந்து, முதனிலை திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசால் ஒப்புதல் அளிக்கப்படும். இதற்குப் பிறகு இறுதித் திட்டம் தயாரிக்கப்படும்.
திட்டத்தின் நோக்கம்: நிலச் சோ்மப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் புதிய பகுதிகளின் திட்டமிட்ட மேம்பாட்டை அடையச் செய்கிறது. அடிப்படை வசதிகளை வழங்குவதுடன், அரசின் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்ளுக்காக நிலம் கையகப்படுத்தும் செயல்முறை மூலம் நிலத்தைத் திரட்டுகிறது. நில உரிமையாளா்களும், அரசின் ஊக்குவிப்பு முகமைகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வடிவில் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, மாநிலத்தின் நகா்ப்புற வளா்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.