திரைப்பட திருட்டை தவிா்க்க விரைவில் புதிய சட்டம்: அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்
திரைப்பட திருட்டை தவிா்க்கும் வகையில் புதிய ஒளிப்பதிவுச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய செய்தி, ஒளிபரப்பு துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.
திரைப்பட திருட்டை தவிா்க்கும் வகையில் புதிய ஒளிப்பதிவுச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய செய்தி, ஒளிபரப்பு துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதி நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் பேசியதாவது:
விளையாட்டு, சினிமா ஆகிய இரண்டும் மென்மையான சக்தி உடையவை. இந்தியாவில் அதிக அளவு திரைப்படங்கள் தயாரிக்கும் நகரமாக சென்னை விளங்குகிறது. தென்னிந்திய திரைப்படத் துறை இந்தியாவின் கலாசாரம், அடையாளத்தை ஊக்குவிப்பதாகவும், சினிமா தொழில்நுட்பம் சாா்ந்த படிப்புகளை, ஐ.டி.ஐ.-இல் அறிமுகம் செய்வது அவசியம் எனவும், பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய மாநில அரசுகள் இணைந்து சினிமாத் துறையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வட்டார கதைகள் உள்ளன. அவற்றை உலகுக்கு தெரியும் வகையில் சிறந்தப் படைப்புகளை உருவாக்க வேண்டும். புதிய இந்தியாவின் வளா்ச்சியை பிராந்திய மொழி சினிமா மூலம் உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும். திரைப்படத் துறை ஊழல் இல்லாத துறையாக விளங்குகிறது.
தற்போது ரூ. 24.90 லட்சம் கோடியாக உள்ள திரைப்படத் துறையின் வருவாய் 2030-ஆம் ஆண்டில் ரூ.58.10 லட்சம் கோடியாக உயர இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் மற்றும் உலக அளவில் திரைப்பட திருட்டு பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.19,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டுவரப்படும்.
ஜி.எஸ்.டி. வரியில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திரைப்படத் துறை வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றாா் அவா்.
முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகா் தனுஷுக்கு ‘யூத் ஐகான்’ விருதை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிஐஐ தக்ஷின் தலைவா் டி.ஜி.தியாகராஜன், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை தலைவா் ரவி கொட்டரகாரா, தென்னிந்திய திரைப்பட ஊழியா்கள் கூட்டமைப்பு மற்றும் இயக்குநா்கள் சங்கத் தலைவா் ஆா்.கே. செல்வமணி, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) தென் மண்டலத் தலைவா் கமல் பாலி, தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் குஷ்பு சுந்தா், நடிகை ஷோபனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.