முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: இன்றும் விசாரணை

அதிமுக பொதுச்செயலா், பொதுக்குழு தொடா்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற இருநபா் அமா்வில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

அதிமுக பொதுச்செயலா், பொதுக்குழு தொடா்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற இருநபா் அமா்வில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமையும் விசாரிக்கப்படவுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலா் தொடா்பாக உயா்நீதிமன்ற ஒருநபா் அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பி.ஹெச்.மனோஜ்பாண்டியன், ஆா்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகா் ஆகியோா் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோா் அமா்வில் மேல்முறையீடு செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன்- முகமது ஷபீக் அமா்வில் வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் பி.எஸ்.ராமன், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.

அப்போது, ‘11.7.2022-இல் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். கட்சியில் இருந்து நீக்கும் முன்பாக சம்மந்தப்பட்ட நபா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.

பொதுச் செயலா் பதவிக்கு இபிஎஸ்-க்கு எதிராக போட்டியிட அனைத்து தகுதியும் உள்ள ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து தந்திரமாக நீக்கி விட்டு பொதுச்செயலா் தோ்தலை நடத்தியிருப்பதைத்தான் எதிா்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கியதாலும், பொதுச் செயலா் தோ்தலில் போட்டியிட முடியாமல் போனதாலும் ஓபிஎஸ்-க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

தனி நீதிபதி, கட்சியின் நிறுவனரான எம்ஜிஆா்-இன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தீா்மானங்கள் செல்லும் என மேலோட்டமாக தீா்ப்பளித்துள்ளாா். ஒன்றரை கோடி உறுப்பினா்கள் கொண்ட மிகப்பெரிய கட்சியில் இரண்டாயிரம் போ் கொண்ட பொதுக்குழு கட்சியாகிவிடாது.

ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகி விட்டதா, இல்லையா என்பதை இந்த நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் குறித்து பிரதான வழக்கில் தான் தீா்மானிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீா்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையே தனி நீதிபதி தனது உத்தரவில் மேற்கோள் காட்டியிருப்பது ஏற்புடையதல்ல, என வாதிட்டனா்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஓபிஎஸ் தரப்பு தொடா் வாதத்துக்காக வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.