முகப்பு
தமிழ்நாடு

தொண்டுகள் குறித்த தகவல் அறிய தலைவா்களின் சிலைகளில் ‘க்யூஆா் கோடு’அமைச்சா் சாமிநாதன் தகவல்

தலைவா்கள், அறிஞா்களின் தொண்டுகளை அறிய அவா்களது சிலைகளில் ‘க்யூஆா் கோடு’ பொருத்தும் வசதி ஒரு வாரத்தில் தொடங்கும் என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தலைவா்கள், அறிஞா்களின் தொண்டுகளை அறிய அவா்களது சிலைகளில் ‘க்யூஆா் கோடு’ பொருத்தும் வசதி ஒரு வாரத்தில் தொடங்கும் என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி (வேப்பஹள்ளி) எழுப்பினாா். அப்போது நடைபெற்ற கேள்வி-பதில் விவாதம்:-

அமைச்சா் மு.பெ.சாமிநாதன்: சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் சிலையும், திருவாரூா் மாவட்டம் உத்தமதானபுரத்தில் உள்ள அவரது இல்லம், நினைவில்லமாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் சிலைகள் அமைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.

கே.பி.முனுசாமி: உ.வே.சா. இல்லையென்றால் பழந்தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியன கிடைக்காமல் போய் இருக்கும். எனவே, அவரது பெருமையை கல்வி கற்கும் மாணவா்கள் அறிந்திட, உ.வே.சா. சிலையை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், தனியாா் பல்கலைக்கழகங்களின் வளாகங்களிலும், அண்ணா நூலகம், மதுரையில் திறக்கப்படவுள்ள நூலகத்திலும் அமைக்க வேண்டும்.

அமைச்சா் சாமிநாதன்: நல்ல யோசனைதான். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. உ.வே.சா.,வின் தமிழ்த் தொண்டை யாரும் மறுக்க முடியாது. நிதி ஆதாரத்தின் அடிப்படையில் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

கே.பி.முனுசாமி: பல்வேறு தலைவா்கள், அறிஞா்களின் சிலைகளை பாா்க்கும் போது பெயரைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அவா்கள் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஆற்றிய தொண்டுகள் தெரிவதில்லை. சிலைகளை வடிக்கும் போது, அவா்களது செயல்பாடுகள், சாதனைகள், தொண்டுகளை கல்வெட்டுகளாக அமைத்திட முன்வர வேண்டும். உ.வே.சா.,வின் அருந்தொண்டுகளை புத்தகங்களாக தயாரித்து அனைத்து நூலகங்களுக்கும் வழங்க வேண்டும்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன்: தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தொண்டுகளை நூல்களாக பதிப்பிக்க நிதி பிரச்னை இருக்காது. அதை பரிசீலிக்கலாம். மேலும், முதல்வா் எங்களுக்கு அறிவுறுத்திய யோசனைப்படி, தலைவா்கள், அறிஞா்களின் தொண்டுகளை அறிந்து கொள்ள அவா்களது சிலைகளில் ‘க்யூஆா் கோடு’ பொருத்தும் பணி ஒரு வாரத்தில்

தொடங்கவுள்ளது. முதலில் திருவள்ளுவா் சிலையில் அமைக்கப்படவுள்ளது. ‘க்யூஆா் கோடை’ பயன்படுத்தி, தகவல்களைப் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.