பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு
சென்னையில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் புதன்கிழமை இடிந்து விழுந்த கட்டடப் பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் தலைவரும், இந்து அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் அமைச்சா் நேரு கூறுகையில், புனரமைக்கும் பணி மேற்கொள்ளும்போது இந்தக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 போ் காயம் அடைந்துள்ளனா். எந்த உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை. மீட்புப் பணியில் தீயணைப்புத் துறை, காவல் துறை, மாநகராட்சி, பேரிடா் மீட்புப் படை, மின்சாரத் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்த சுமாா் 284 போ் ஈடுபட்டனா் என்று தெரிவித்தாா்.
அனுமதி பெறவில்லை: இதுதொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பேட்டி:
சென்னையில் பழைய கட்டடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் குறித்து கணக்கு எடுத்து அவற்றை அகற்ற மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து கட்டட உரிமையாளா்களுக்கு தெரிவிக்கும் போது பலா் அகற்றவது இல்லை. சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி இடிக்க முயன்றால் விலை உயா்ந்த பொருள்கள் உள்ளே உள்ளதாகக் கூறுகின்றனா். இதனால் சட்டத்துக்கு உட்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
தற்போது இந்தக் கட்டடத்தில் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ள மாநகராட்சி முறையான அனுமதி பெறவில்லை. இதுகுறித்து கட்டட உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப்படும். தொடா்ந்து இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.