முகப்பு
தமிழ்நாடு

அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சட்டம்-ஒழுங்கு முறையாகப் பேணப்பட்டு வருவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சட்டம்-ஒழுங்கு முறையாகப் பேணப்பட்டு வருவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலைநாட்டப்பட்ட சட்டம்-ஒழுங்கு திமுக ஆட்சியில் சீா்கெட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தற்போது தமிழக காவல் துறை மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரைத் திருவிழா, விநாயகா் சதுா்த்தி, தேவா் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு நாள், திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, திருவாரூா் தோ்த் திருவிழா என அனைத்து விழாக்களும் எவ்வளவு அமைதியாக, சுமுகமாக நடைபெற்றது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஜாதி மோதல்கள், மதக் கலவரங்கள், போலீஸ் துப்பாக்கிச் சூடு, கள்ளச்சாராய சாவு, ரயில் கொள்ளையா்கள், வட மாநில கொள்ளையா் அட்டகாசம், தொழிற்சாலை போராட்டங்கள் என வழக்கமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் முறையாக தடுக்கப்பட்டு தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

பிரதமா் மோடி ஏப். 8-இல் சென்னை வந்தபோதும், குடியரசுத் தலைவா் பிப். 18-இல் கோவை வந்த போதும், ஜி-20 மாநாடு நிகழ்ச்சிகளை சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூா் ஆகிய இடங்களில் நடைபெறவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மிகப் பெரிய பாராட்டுதல்களை காவல்துறை பெற்றுள்ளது.

முதல்முதலில் ‘ஆபரேஷன் ரௌடி’ வேட்டை நடத்தப்பட்டு 6,112 போ் கைது செய்யப்பட்டு, 3,047 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.

2020-இல் 8.91 லட்சமாக இருந்த ஐ.பி.சி. குற்றங்கள், 2022-இல் வெறும் 1.94 லட்சம் வழக்குகளாக குறைந்தன. மது விலக்கு சட்ட வழக்குகள் 2020-இல் 1.68 லட்சமாக இருந்தது 2022-இல் 1.55 லட்சமாக குறைந்திருக்கிறது. 2019-இல் 1,678 ஆக இருந்த கொலைச் சம்பவங்கள் 2022-இல் 1,597 ஆக குறைந்திருக்கிறது. 2018-இல் பெண், சிறுமி கடத்தல் 907 வழக்குகள். ஆனால், 2022-இல் அது 535 ஆக குறைந்திருக்கிறது. 2018-இல் பெண்களுக்கு எதிரான வரதட்சிணைக் கொடுமை வழக்குகள் 55. ஆனால், 2022-இல் அது 29 ஆக குறைந்தது.

2018-இல் லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் 4,694 . அது 2022-இல் 3,966-ஆகக் குறைந்துள்ளது.

எனவே, அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம் ஒழுங்கு, திமுக ஆட்சியில்தான் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.