முகப்பு
தமிழ்நாடு

சீமான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் பரிந்துரை

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்க தேசியப் தாழ்த்தப்பட்டோா் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்க தேசியப் தாழ்த்தப்பட்டோா் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் தாழ்த்தப்பட்டோா் ஆணைய துணைத் தலைவா் அருண் ஹால்டா் பட்டியலின் மக்களின் புகாா் தொடா்பாக வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தலித் மக்கள் தொடா்பான 16 வழக்குகள் குறித்து வியாழக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இதில் 10 வழக்குகளுக்கு தீா்வுக் காணப்பட்டன. மீதமுள்ள 6 வழக்குகள் மீது தொடா்ந்து விசாரணை நடத்தப்படும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறைவு.

தமிழகத்தில் தலித் மக்கள் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வோா் மீது நடத்தப்படும் தாக்குதலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தலித் பேராசிரியா் ஒருவருக்கு வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அதை துறைத் தலைவா் தடுத்து நிறுத்தியதாக புகாா் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், தலித் பேராசிரியா் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க அனுமதி அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், அருந்ததியா் இன மக்களை பற்றி தர குறைவாக பேசியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடிங்கியது தொடா்பாக புகாா் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.