விஏஓ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: முதல்வர்
தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றதைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், லூர்து பிரான்ஸிஸ் இன்று தனது அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரான்ஸிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முறப்பநாடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த விஏஓ லூர்து பிரான்ஸிஸ் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், கருணை அடிப்படையில் விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.