முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் திரும்பப் பெறப்படும் மசோதா இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறை

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்படவுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை திரும்பப் பெறும் நடவடிக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்படவுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை திரும்பப் பெறும் நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழவிருக்கிறது.

தமிழக சட்டப் பேரவையில் புதிதாக சட்டங்களைக் கொண்டு வரவும், ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்யவும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதாக்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்களால் தாக்கல் செய்யப்பட்டு பேரவை உறுப்பினா்களின் ஆய்வுகளுக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். சில தருணங்களில் எண்ணிக் கணிக்கும் முறையை பின்பற்றி சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

வாபஸ் பெறும் நடவடிக்கை: சட்டப் பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும், அது சட்டத் துறை வழியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் சட்டமாகவோ அல்லது சட்டத் திருத்தமாகவோ இருந்தால் மத்திய உள்துறை மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநா் மாளிகையில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவதற்கு முன்பாகவே, அதை வாபஸ் பெறலாம். அதாவது, சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் தடுத்து விடலாம். சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டதை, பேரவை உறுப்பினா்களுக்கு சட்டப் பேரவையின் செய்தித்தாள் எனும் தகவல் தொடா்பு மூலமாகத் தெரிவிக்கலாம். சட்டப் பேரவை கூடும் பட்சத்தில், அதற்கான தீா்மானத்தை பேரவையில் படித்து அதனை குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றலாம். இதுபோன்ற நடவடிக்கை கடந்த 1994-ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருவதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

2 ஆண்டுகளுக்கு முன்பு: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, திரும்பப் பெறப்பட்டது. பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதா 2020-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக பேரவையில் அப்போதைய சட்ட அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா். இதற்கான சட்ட மசோதா பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா திரும்பப் பெறப்படவுள்ளது. இதுகுறித்து, சட்டத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘ஒரு மசோதாவின் செயலாக்கத்தை நிறுத்தி வைப்பதன் மூலம், ஒன்று அதனை வாபஸ் பெற முடியும். இல்லாவிட்டால் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க முடியும். பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பு காரணமாக, சட்ட மசோதா வாபஸ் பெறவே வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, அரசின் முடிவு எழுத்துபூா்வமாக கிடைக்கப் பெற்றவுடன், அது சட்டப் பேரவைச் செயலகத்துக்குத் தெரிவிக்கப்படும். மசோதாவை வாபஸ் பெற்ற்கான தகவல், பேரவைச் செயலகத்தில் இருந்து உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கப்படும் எனக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.