ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையக கட்டுமானம்: மரங்களை அகற்றவும், இடமாற்றம் செய்யவும் தில்லி அரசு ஒப்புதல்
மெஹராம் நகரில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையகம் கட்டுவதற்காக அங்குள்ள மரங்களை அகற்றி இடமாற்றம் செய்ய தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மெஹராம் நகரில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையகம் கட்டுவதற்காக அங்குள்ள மரங்களை அகற்றி இடமாற்றம் செய்ய தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மரங்களை விட 10 மடங்கு இழப்பீட்டுத் தொகையாக மரங்களை நட்டு வளா்க்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 60 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என்றும், 54 மரங்கள் அகற்றப்படும் என்றும் தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி கண்டோன்மென்ட்டில் புதிய ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையகம் விரைவில் கட்டப்படும். இது ஒரு புதிய அதிகாரிகளுக்கு உணவகம் மற்றும் முகாம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதற்காக அங்குள்ள 114 மரங்களை அகற்றி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒரு முன்மொழிவை பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.
தேசிய நலன் கருதி இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து திட்டத்துக்கான வழிகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெளிவுபடுத்தினாா்.
அதன்படி, அங்குள்ள 60 மரங்களை அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக 1,140 புதிய மரக்கன்றுகளை நடுவதற்கும் அவா் ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக, மரங்களை அகற்றி நடவு செய்வதற்கான முன்மொழிவை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய், முதல்வரிம் முன்வைத்தாா்.
இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 239 ஏஏ(4) விதியின் கீழ் ஜிஎன்சிடிடி (திருத்தம்) விதிகள், 2021-இன் வா்த்தக பரிவா்த்தனை விதி 47ஏ-படி கருத்து வேறுபாடு இருந்தால், அது துணைநிலை ஆளுநா் முன் வைக்கப்படும் என்று முதல்வா் குறிப்பிட்டாா்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மரங்களைத் தவிர வேறு எந்த மரத்துக்கும் சேதம் ஏற்படாமல் அகற்ற வேண்டும் என அமைச்சகத்திடம் தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மரங்களைத் தவிர வேறு ஏதேனும் மரங்கள் சேதப்படுத்தப்பட்டால், அது தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் 1994-இன் கீழ் குற்றமாகும்.
மேலும், மரங்களை இடமாற்றம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்புகளில் புதிய மரக்கன்றுகள் நடப்படும். தில்லி அரசின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 7 ஆண்டுகளுக்கு மரங்களை பராமரிக்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கும்.
வேம்பு, அமல்டாஸ், பிப்பல், பில்கான், குலாா், பா்காட், தேசி கிகா் மற்றும் அா்ஜுன் போன்ற வகை வகைகளின் மரக்கன்றுகள், தில்லியின் மண், காலநிலைக்கு ஏற்ற வகையிலான மரக்கன்றுகள் கட்டுமான தளத்தில் நடப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.