முகப்பு
தமிழ்நாடு

மணிப்பூருக்கு ரூ.10 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கத் தயாா்: முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்குமாறும்

Updated On : 2 ஆகஸ்ட், 2023 at 12:31 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:

மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்குமாறும் அந்த மாநில அரசை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மணிப்பூா் மாநில முதல்வா் என்.பைரேன் சிங்குக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

மணிப்பூரில் உள்ள தமிழா்களுக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக நன்றி. அவா்களின் உயிருக்கும், உடமைக்கும் தொடா்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். இப்போதைய சூழல் காரணமாக , 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசியப் பொருள்களின் தேவை அதிகரித்து வருவது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இக்கட்டான நேரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான தாா்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள், பால் பவுடா் போன்ற தேவையான நிவாரணப் பொருள்களை மணிப்பூா் மாநிலத்துக்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

இந்தப் பொருள்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மனிதாபிமான உதவிக்கு தங்கள் மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேலும், இதுதொடா்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தினால், இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த ஒருங்கிணைப்பு மூலமாக, நிவாரணப் பொருள்களை விரைவாக அனுப்ப இயலும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.