முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் காணாமல்போன இரு குழந்தைகள் மீட்பு; ஒருவர் கைது!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன இரு குழந்தைகளையும் காவல்துறையினர் மீட்டு அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Updated On : 11 ஆகஸ்ட், 2023 at 4:01 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:17 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன இரு குழந்தைகளையும் காவல்துறையினர் மீட்டு அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சௌந்தர்யா(7). அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் சக்திவேல்(3) இக்குழந்தைகள் இருவரும் அவரவர் பெற்றோர்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் உறவினரான காமாட்சியை சந்திக்க வந்திருந்தபோது காணாமல் போயிருந்தனர்.கடந்த 8 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிரமாக குழந்தைகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிபுரம் அருகேயுள்ள அஞ்சூர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இரு குழந்தைகளும் இருப்பதை அறிந்து எஸ்பி எம்.சுதாகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டனர். பின்னர் அக்குழந்தைகள் இருவரையும் அவரவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் செய்தியாளர்களிடம் அவரது அலுவலகத்தில் கூறியது..

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இரு குழந்தைகளும் காணாமல் போனது தொடர்பாக புகாரைப் பெற்றவுடன் 10 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடினோம். கண்காணிப்பு கேமராவில் அவ்விரு குழந்தைகளையும் ஒரு பெண் அழைத்துச் செல்வது போல காட்சி பதிவாகி இருந்தது. அக்காட்சிகளின் அடிப்படையிலும், பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரிலும் அப்பெண் வாலாஜாபாத் ஒன்றியம் கன்னிகாபுரம் அருகேயுள்ள அஞ்சூர் என்பது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது குழந்தைகள் இருவரும் கோழிப்பண்ணையில் இருந்தது தெரிய வந்தது. இருவரையும் மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

குழந்தைகளை மீட்பதில் தீவிர கவனம் செலுத்திய டிஎஸ்பி ஜூலியஸ்சீசர், ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன், பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் உதவியாக இருந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். குழந்தைகளை கடத்துவதற்கு உதவிய நபரான வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கடத்திய பெண் லட்சுமி என்பவரைத் தேடி வருகிறோம். அவரைக் கைது செய்தால்தான் என்ன காரணத்திற்காக அவர் கடத்தினார் என்ற விபரம் தெரிய வரும். லட்சுமியை பிடிப்பதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் எஸ்பி எம்.சுதாகர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.