வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை வலையங்குளத்தில் வருகின்ற 20ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன். மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர், மூத்த நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த மாநாட்டின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பொதுத்தேர்தலில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு ஏமாற்றுகின்றனர்.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்களை அவமானப்படுத்தியது தொடர்பாக தெரிவித்தார். அந்த சம்பவம் நடைபெற்ற போது நானும் சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்தேன். அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூகநீதி குறித்து பேசுவதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
பெண்ணென்றும் பாராமல் முதல்வரின் முன்னிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அந்த சம்பவத்தினை கே.கே. எஸ்.எஸ்.ராமச்சந்திரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருக்கும் ஒருவர்தான் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். சில அமைச்சர்கள் தாக்கினார்கள். இந்த சம்பவத்தின் போது மீண்டும் முதல்வராகத்தான் இந்த அவையில் நான் வருவேன் என ஜெயலலிதா சபதம் எடுத்தார். அதைப்போலவே அடுத்த தேர்தலிலேயே மக்கள் திமுகவினருக்கு தக்க பதிலடி கொடுத்து ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கினார்கள்.
ஆனால் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வு ரத்து செய்ய தங்களது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து மக்களவையில் தற்போது வரை குரல் கொடுக்கவில்லை. அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில பாஜக அதிமுகவுக்கு எதிராக உள்ளதா என்ற கேள்விக்கு நீங்களே பதில் அளித்து விட்டீர்கள் என தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் வைத்துள்ள இந்தியா என்ற பெயர் மக்களுக்கானது அதை வைத்தது தவறு.
எதிர்க்கட்சியினர் நடத்திய பெங்களூர் மாநாட்டில் எங்களது ஆதரவு வேண்டுமென்றால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என புது தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். கண்டிஷன் போட்டு தான் கூட்டணியில் சேர்ந்தார். ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால் இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்வர் அறிவிப்பு கொடுத்திருந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் தண்ணி வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் தான் தமிழக முதல்வரை வரவேற்றார். அப்போதாவது இது தொடர்பாக தமிழக முதல்வர் பேசியிருக்கலாம். அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு தற்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஜாதி, மதச் சண்டைகள் எல்லாம் பார்க்க முடியும். அதுதான் தற்போதும் நடைபெற்று வருகிறது என நாங்குநேரி சம்பவத்தை கோடிட்டு பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.