முகப்பு
தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
நெய்வேலி, அண்ணா திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

நெய்வேலி: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நெய்வேலியில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடந்த 20 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பிரதமா் அறிவித்த ரோஸ்கா் மேளா திட்டத்தின்கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரப்படுத்தும் வரை குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.50,000 வழங்க வேண்டும், என்எல்சி-க்கு வீடு, நிலம் கொடுத்த சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல ஆணையம், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் முன்னிலையில் பலமுறை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. 

இந்நிலையில், இந்தச் சங்கத்தினா் நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் கடந்த 2 காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொண்டனர். 

தொழிலாளர்களின் கோரிக்கை போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில், என்எல்சி நிர்வாகம், ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இடையே திங்கள்கிழமை பேச்சு வார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 22 ஆம் தேதி அளிக்கும் தீர்ப்பினை என்எல்சி நிர்வாகமும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், போராட்டம் தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளா்கள் 20 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸ் மீது என்எல்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு என்எல்சி நிர்வாகம் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், மதியம் முதல் பணிக்கு செல்வதாக அறிவித்துள்ளதையடுத்து 20 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →