சேலம்: கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலாவின் ஓட்டுநராக மட்டுமே பணியாற்றியவர், ஒரு நாள் கூட ஜெயலலிதாவுக்கு கனகராஜ் கார் ஓட்ட வில்லை, எனவே இனி ஊடகங்கள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் எனக் கூறினால், நான் வழக்கு தொடருவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் அதுபோல கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று கூறி ஓபிஎஸ் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தங்கி இருக்கும் கே.பழனிசாமி அங்குள்ள கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. எனது தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நீதி வென்றுள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவோம், மாநிலத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | காலை உணவுத் திட்டத்தை தொடக்கிவைத்த அதிமுக எம்எல்ஏ!
கொடநாடு வழக்கு தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமியிடம் நடத்த வேண்டு என மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான கனகராஜின் சகோதரா் தனபால் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், யாரோ ஒருவர் ரோட்டில் போகிறவர் எல்லாம் கூறுவதை ஊடகங்கள் வெளியிடுவது தவறு, தனது ஆட்சியின் போது பல சம்பவங்கள் நடந்தது. அதனை சட்டத்தின்படி நாங்கள் கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிமுக ஆட்சியின் போது சட்டத்தின் ஆட்சிதான் நடந்தது. ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவர் தனபால், அவர் மூன்று மாதம் சிறையில் இருந்தவர், நில அபகரிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கிறார், அவர் கூறுவதை எல்லாம் ஊடகங்கள் வெளியிடுவது தவறு, கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் சசிகலா அவர்களின் ஓட்டுநராக மட்டுமே பணியாற்றியவர், ஒரு நாள் கூட ஜெயலலிதாவுக்கு கனகராஜ் கார் ஓட்ட வில்லை, எனவே இனி ஊடகங்கள் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநர் என கூறினால் நான் வழக்குத் தொடருவேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
தொடர்ந்து மதுரை மாநாடு குறித்து கூறும் போது, மதுரையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியுள்ளோம். பதினைந்து லட்சம் பேர் திரண்டனர். இதுவே அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்றார்.
பின்னர், சந்திரயான்-3 நிலவில் இறங்கியது ஒரு வரலாற்று சாதனையாகும். இந்தியா வல்லரசு நாடாக உயர்வதற்கு இது அடித்தளமாக அமைந்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முன்னின்று சாதனை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை. அவருக்கு நான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளேன்.
மேலும், இனி அதிமுகவில் ஒரு சிலரை தவிர்த்து கழகத்திற்காக உழைத்தவர்கள், கழகம் வளர பாடுபட்டவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வர விருப்பப்பட்டால் அவர்களை சேர்த்துக் கொள்வோம். ஆனால் அதிமுக-வுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை என பழனிசாமி உறுதியாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.