தமிழ்நாடு

பொன்னாடை, பூங்கொத்து தேவையில்லை: திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

DIN

சென்னை: கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும் போது பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும், பொன்னாடை, பூங்கொத்து வழங்க வேண்டாம் என்றும் திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து திமுக இளைஞர் அணிச்செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐந்து நாள்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதைவிடக் குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணி திரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பது தான் நமக்கான பெருமை.

சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக ‘இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்’நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு பதிலாக புத்தகங்கள், கழக வேட்டி துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாகவும் தரலாம்.

இந்தப் பயணத்தில் பார்த்த, மகிழ்ச்சிக் கடலில் திளைத்த, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டு முதல்வருக்கும் திராவிட மாடல் அரசுக்கும் நன்றி சொன்ன ஏழை எளிய மக்கள், கோரிக்கை மனுக்களைக் கையில் சுமந்தபடி காத்திருந்த பெண்கள் என கலவையான முகங்கள் என் முன்வந்து போகின்றன.

லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது.

“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமி­ருந்து கற்றுக்கொள்” என்ற அண்ணாவின் வாக்கின்படி, முத்தமிழறிஞர் வழியில், கழகத்தலைவர் வழிகாட்டலில் அடுத்தப் பயணத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

SCROLL FOR NEXT