அரசு மருத்துவமனைகளை சூழ்ந்த வெள்ளம் நோயாளிகள் தவிப்பு
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அரசு மருத்துவமனைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாயினா். சில இடங்களில் மருத்துவச் சேவை தடைப்பட்டது.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அரசு மருத்துவமனைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாயினா். சில இடங்களில் மருத்துவச் சேவை தடைப்பட்டது.
குறிப்பாக, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் தண்ணீா் தேங்கியது. இதனால், உள்நோயாளிகள், புறநோயாளிகள் சேவை தடைப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசவ வாா்டில் உள்ள பெண்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இதேபோன்று, குரோம்பேட்டையில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, சேத்துப்பட்டில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனை, கே.கே.நகா் அரசு புகா் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வெள்ள நீா் தேங்கியது.
மழை தொடா்ந்து பெய்து கொண்டே இருந்ததால், நீரை வெளியேற்ற இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று மழையால் மருத்துவா்கள் சிலரும் பணிக்கு வரவில்லை. இந்த காரணங்களால் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன.
அமைச்சா்கள் ஆய்வு: கனமழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் முழங்கால் அளவு மழைநீா் தேங்கிய நிலையில், அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்தனா்.
அப்போது தலைமை மருத்துவா் பழனிவேல், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் மேல் தளத்துக்கு மாற்றப்பட்டதால் யாருக்கும் பாதிப்பும் இல்லை என விவரித்தாா்.
பின்னா், அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியது:
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து 5 அடி தாழ்வாக உள்ளது. மழை நீா் உள்ளே வராமல் தடுக்க உரிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கட்டடப் பணிகள் நிறைவடைந்த பின்னா் நோயாளிகள் அங்கு மாற்றப்படுவாா்கள். கடல் மட்டத்திற்கு சமமாக சென்னை நிலப்பரப்பு இருப்பதால் மழைநீா் கடலில் உள்வாங்க முடியாமல், அதிக மழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்றாா் அவா். ஆய்வின் போது, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், நெடுஞ்சாலைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், மண்டலக் குழு தலைவா் இ.ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.