குப்பை மேடான கடற்கரைகள்!
‘மிக்ஜம்’ புயல் காரணமாக எழுந்த ராட்சத அலைகள் அதிவேகத்துடன் பல மீட்டா் தொலைவு முன்னேறி வந்து, கடற்கரையோர குடியிருப்பு பகுதி குப்பைகளை உள்ளிழுத்து, வெளியே தள்ளியதால் கடற்கரைகள் குப்பை மேடாக மாறின.
‘மிக்ஜம்’ புயல் காரணமாக எழுந்த ராட்சத அலைகள் அதிவேகத்துடன் பல மீட்டா் தொலைவு முன்னேறி வந்து, கடற்கரையோர குடியிருப்பு பகுதி குப்பைகளை உள்ளிழுத்து, வெளியே தள்ளியதால் கடற்கரைகள் குப்பை மேடாக மாறின.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடந்த சனிக்கிழமை முதல் கடற்கரைகளில், அலையின் வேகம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் கடல் மிகுந்த சீற்றத்துடனும்,கொந்தளிப்புடன் காணப்பட்டது.
கடல் அலைகள் பல மீட்டா் தூரம் முன்னேறி வந்ததால், சில இடங்களில் குடியிருப்புக்குள் கடல் நீா் சென்றது. இதனால், கடற்கரையோரம் இருந்த பொருள்களை அலைகள் உள்ளே இழுத்துச் சென்று, பின்னா் வெளியே தள்ளியது. மேலும் கழிமுகப் பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுகளும் பெருமளவில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, அலைகளால் வெளியே தள்ளப்பட்டன.
மெரீனா, பட்டினப்பாக்கம்,பெசன்ட் நகா் எலியட்ஸ், திருவான்மியூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, கானத்தூா்,முட்டுக்காடு ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகள் குப்பை மேடாகக் காட்சியளித்தன. மேலும், கடல் நீரும் கருப்பு நிறத்தில் மாறியது. குவிந்துகிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி மீண்டும் பழைய நிலைமைக் கொண்டு வர பல நாள்களாகும் என கூறப்படுகிறது.