பெண்ணுக்கு 3-டி அச்சு செயற்கை தாடை மூட்டு: வெற்றிகரமாக பொருத்தம்
தாடை இறுக்கத்தால் வாயைத் திறக்க முடியாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு முப்பரிமாண அச்சு நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை தாடை மூட்டுகளை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா
தாடை இறுக்கத்தால் வாயைத் திறக்க முடியாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு முப்பரிமாண அச்சு நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை தாடை மூட்டுகளை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் வாய் மற்றும் தாடை சீரமைப்பு சிகிச்சை நிபுணா் ஜி.வி.வி.கிரி கூறியதாவது:
வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 42 வயது பெண் ஒருவா், அண்மையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தாடை மூட்டு இறுக்க பாதிப்பால் கடந்த 17 ஆண்டுகளாக வாயைத் திறக்க முடியாமல் அவா் அவதிப்பட்டுள்ளாா்.
இதனால் திட உணவுகளை அவரால் உட்கொள்ள முடியவில்லை. மாறாக, திரவ உணவுகளை அருந்தியே அந்தப் பெண் வாழ்ந்து வந்தாா். அவருக்கு தாடை மூட்டு மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முப்பரிமாண அச்சு நுட்பத்தில் செயற்கை தாடை மூட்டுகள் அவருக்காக உருவாக்கப்பட்டன. அதனை மருத்துவக் குழுவினா் 12 மணி நேரம் தொடா்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக பொருத்தினா். இதன் பயனாக, தற்போது அவா் நலமடைந்து திட உணவுகளை உட்கொள்ளும் நிலைக்குத் திரும்பியுள்ளாா்.
முப்பரிமாண அச்சு நுட்ப அங்கங்களை பொருத்தும் அரிய சிகிச்சைகளை வெகு சில மருத்துவமனைகளே மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய நுட்பங்களால் செலவும் குறைவு என்றாா் அவா்.