முகப்பு
தினமணி கதிர்

மனம் மயக்கும் மலைச்சிகரம்!

துணிச்சலும், சாகசமும் நிறைந்த பயணத்தை விரும்புவோருக்கு குடகு மலைப் பகுதியில் இருக்கும் மண்டல்பட்டி மலைச் சிகரம் (மண்டல்பட்டி பீக்) சிறந்ததொரு தேர்வாக இருக்கும்.

Updated On : 15 மார்ச், 2026 at 9:25 AM
பகிர்:

துணிச்சலும், சாகசமும் நிறைந்த பயணத்தை விரும்புவோருக்கு குடகு மலைப் பகுதியில் இருக்கும் மண்டல்பட்டி மலைச் சிகரம் (மண்டல்பட்டி பீக்) சிறந்ததொரு தேர்வாக இருக்கும். கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட குடகு (கூர்க்) மாவட்டத்திலுள்ள முக்கிய நகரமான மடிக்கேரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்தச் சிகரத்துக்கு ஜீப் சவாரியில் சாகசமான பயணத்தில் மட்டுமே சாத்தியமாகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,600 மீட்டருக்கு மேல் (5,250 அடி) அமைந்துள்ள இந்தச் சிகரத்தை நாள்தோறும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணியர் பார்வையிடலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமன காட்சிகள் பிரபலம்.

மடிக்கேரி நகரம் அல்லது அபே நீர்வீழ்ச்சியில் இருந்து ஜீப் கிடைக்கிறது. சுமார் 15 கி. மீ. தொலைவுக்கு தார் சாலைகளிலும், செப்பனிடப்படாத மண் சாலைகளிலும் பயணிக்கும் ஜீப், அதன்பின்னர் சுமார் 5 கி. மீ. தொலைவுக்கு கரடுமுரடான பாதையில் பயணிக்கிறது. தனியார் ஜீப்புகளில் ஓட்டுநருடன் சேர்த்து ஆறு அல்லது ஏழு பேர் மட்டுமே பயணிக்க முடியும். ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்தை இயக்குவது மிகவும் சிரமம்.

அடர்த்தியான புஷ்பகிரி வனச்சரணாலயப் பகுதிக்கு உள்பட்ட சாலை என்பதால், இருபுறமும் பசுமை போர்த்திய மரங்கள் உள்ளன. காபித் தோட்டங்களின் ஊடாகப் பயணிப்பது இனிய அனுபவம். இடையிடையே பள்ளத்தாக்குகள், அருவிகள், மலைத் தொடர்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கையின் வனப்பில் மனதைப் பறிகொடுக்கலாம். காட்டெருமை, யானை போன்ற விலங்குகளும் இந்த வழியில் பயணிக்க வாய்ப்புண்டு.

சுமார் 45 நிமிடங்கள் ஜீப்பில் பயணம் செய்தவுடன், மண்டல்பட்டி மலை அடிவாரத்தில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். அங்கிருந்து சிறிது தூரத்துக்கு நடந்துதான் செல்ல வேண்டும். கற்களும், சிறு சிறு பாறைகளும் நிறைந்த கடினமான பாதையில் நடந்து சென்று மலைச்சிகரத்தின் உச்சியை அடைந்தோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரண்களாகச் சூழ்ந்திருக்க, மலையைத் தழுவி நிற்கும் மேகங்களின் அழகு அபாரமாக இருக்கும். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்தில் (வாட்ச் டவர்) ஏறி, இயற்கையை முழுமையாக ரசிக்கலாம். புகைப்படங்கள் எடுத்தும் மகிழலாம். 360 டிகிரி கோணத்தில் விரிந்துகிடக்கும் மலைச் சிகரத்தின் அழகைப் பார்க்கும்போது, மனதில் அலாதி அமைதி குடிகொள்கிறது.

'ஆளரவமற்ற அமைதியான அந்த இடத்தில் பல மணி நேரங்களைச் செலவிட ஆசைதான். ஆனால், மலை அடிவாரத்தை அடைந்ததுமே 45 நிமிடத்துக்குள் திரும்பி வந்து விடுங்கள்' என்று ஜீப் ஓட்டுநர்கள் உத்தரவிடுவதால், இயற்கையின் பேரழகிலிருந்து கண்களை அகற்ற மனமின்றி, வந்த வழியிலேயே சுற்றுலாப் பயணியர் கீழே இறங்கி நடந்து ஜீப் நிற்கும் இடத்தை அடைகின்றனர். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கும், சாகசப் பயணத்தை நேசிப்பவர்களுக்கும் ஏற்ற பயணம் இது.

வயதானவர்கள், சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் இந்தப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. மலைச் சிகரத்துக்குச் செல்லும் வழியில் உணவுப் பண்டங்கள், தண்ணீர் எதுவும் கிடைக்காது என்பதால், தேவையானவற்றை தங்களுடன் எடுத்துச்செல்வது நல்லது. அவசரத் தேவைக்கான மருந்துகளையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

மண்டல்பட்டி சிகரத்தைக் கண்டுகளிக்க அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே மிகவும் உகந்தது. மழைக்காலத்தில் பாதை வழுக்கும் என்பதால், பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

மைசூரிலிருந்து சுமார் 118 கி.மீ. தொலைவில் குடகு உள்ளது. பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக 5 மணி நேரத்தில் குடகை அடையலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →