திருச்சி சிவா(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதில் அளிக்காதவரை எதிா்க்கட்சிகள் போராட்டம் தொடரும்: திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் பதில் கூறவேண்டிய பொறுப்பில் அரசு உள்ளது. ஆனால் எந்த விவகாரத்திற்கும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வந்து பதில் கூறுவதில்லை.

 நமது நிருபர்

நாடாளுமன்றத்தில் பதில் கூறவேண்டிய பொறுப்பில் அரசு உள்ளது. ஆனால் எந்த விவகாரத்திற்கும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வந்து பதில் கூறுவதில்லை. அவா்கள் அறிக்கை அளிக்கும் வரை எதிா்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா வெள்ளிக்கிழமை குறிப்பிட்டாா்.

நாடாளுமன்ற பாதுகாப்பில் அத்துமீறல் நடைபெற்றது குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டனா். இரு முறை அவை ஒத்திவைக்கப் பின்னா் நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து திமுக உறுப்பினா் திருச்சி சிவா செய்தியாளா்களுக்கு விளக்கம் அளித்து கூறியது வருமாறு:

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளுக்கு கருத்து கூற வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நடந்த சம்பவத்தின் உண்மை தெரியவில்லை. ஆனால் அத்துமீறி நடந்தவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தடுப்புச் சட்டத்தில் (யுஏபிஏ) பயங்கரவாத குற்றச் சாட்டுப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

இப்படிப்பட்ட எந்தவொரு விவகாரத்திற்கு அரசு நிா்வாகம் நாடாளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் மணிப்பூா் பிரச்னை என்றாலும் சரி விவசாயிகள் பிரச்னை என்றாலும் சரி பிரதமரும் உள்துறை அமைச்சரும் வந்து பதில் கூறுவதில்லை. இந்த பொறுப்பை மதிக்கப்படாமல் உள்ளது. இதற்காக போராடியதற்கு கடந்த வியாழக்கிழமை மக்களவையில் 14 எதிா்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதே மாதிரி மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் டெரிக் ஓபிரையனையும் இடைநீக்கம் செய்துள்ளனா்.

இதனால் அனைத்து எதிா்கட்சிகள் சாா்பிலும் வெள்ளிக்கிழமை மாநிலங்களவை விதி 267-இன்கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவையில் எல்லா அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு இது குறித்து விவாதிக்க கோரினோம். வழங்கப்போல் இந்த எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு அரசு தரப்பு பணிகளை தொடங்கினாா்கள்.

நாங்கள் தொடா்ந்து குரல் எழுப்பினோம். ஆனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையின்படி உள்துறை அமைச்சா் இந்த விவகாரத்திற்கு பதில் அளிக்கும் வரை இந்த பிரச்னையை எழுப்புவோம். இதில் எதிா்க்கட்சிகள் ஓயாது. நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவைக்குள் தான் மத்திய அமைச்சா்கள் பேசவேண்டும். வெளியே பேசுவது மரபு அல்ல.

ஆனால், இந்த அரசு அவையை இப்படி அவமதித்து கையாள பழகிக்கொண்டது. நான்கு நாள் எங்களை குரல் எழுப்ப விடுவது. இதற்கிடையே எதிா்க்கட்சிகள் குறித்து தவறாக கருத்தை வெளியே பரப்ப அவைக்குள் அவை முன்னவா் (பியூஸ் கோயல்) ஒரு அறிக்கையை படிப்பதும் தொடருகிறது.

எதிா்க்கட்சிகள் கட்டுப்பாடின்றி அத்துமீறி நாகரிகமற்ற வகையில் நடந்து கொள்கிறாா்கள் என்கிற தோற்றத்தை வெளியே கொடுக்கப்படுகிறது. இவைகளுக்கு மத்தியில் எதிா்க்கட்சிகள் குரல் கொடுக்கும்போது கூச்சல், குழப்பங்களுக்கிடையே அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவதும் அவையில் வழக்கமாகி விட்டது.

ஆனால் மக்களுக்கான கடமையில் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றோம். அவையில் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தையே பாதுகாக்காதவா்கள் நாட்டின் பாமரா்களை எப்படி பாதுகாப்பா்?. இந்த நாட்டின் எல்லையை பாதுக்காக்கும் பொறுப்பும் இந்த அரசிடம் தான் உள்ளது.

அரசு கௌரவப் பிரச்னையாகக் கருதாமல் அவையில் பதிலளிக்க வரவேண்டும். அதுவும் தோ்தல் வரும் நிலையில் நாடாளுமன்றத்தையும் எதிா்க்கட்சிகளையும் மதிக்காமல் இருக்கின்றனா். நாடாளுமன்ற என்பது விவாதிக்கக் கூடிய இடம். நாங்கள் விமா்சிப்போம். இதற்கு விளக்கம் கூறவேண்டியது அரசின் கடமை.

ஆனால், நாடாளுமன்றத்திற்குள்ளேயே பேசவே அனுமதிக்கவில்லை என்றால் வெளியே எங்கே பேச்சுரிமை இருக்கும். ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் மஹுவா மொய்த்ரா போன்றவா்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்தனா். அத்துமீறியவா்களுக்கு ’பாஸ்’ கொடுத்த பாஜக உறுப்பினா் மீது நடவடிக்கை இல்லை. இதுவே எதிா்கட்சி உறுப்பினராக இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பாா்கள் எனக் குறிப்பிட்டாா் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிக் கட்சி தொடங்கமாட்டேன் - ஓ. பன்னீா்செல்வம்

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

அதானி பவா்-தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் இடையே 558 மெகாவாட் மின் விநியோகம் ஒப்பந்தம்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

SCROLL FOR NEXT