சென்னை: வரும் ஜனவரி 15 தமிழ் புத்தாண்டு அன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறக்கப்படும் என சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கு முழுமையான திட்டமிடல் இல்லாததால் ரூ.100 கோடி மதிப்பில் தற்போது அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு வரும் சாலைகளை விரிவாக்கம் செய்து புதிய சாலைகளும், மழைக்காலங்களில் வெள்ளநீா் உடனே வடியும் வகையில் ரூ.13 கோடி செலவில் 1,250 மீ. நீளத்துக்கு புதிய மழைநீா் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
காவல் நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணி என பேருந்து நிலையப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா மற்றும் கனமழை வெள்ளம் காரணமாக பேருந்து முனையம் திறப்பு தள்ளிப்போனது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் ஜனவரி 15 ஆம் தேதி(தமிழ் புத்தாண்டு) கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றாா் அவா்.
1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. முனையத்தில் இருந்து 2310 பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர்,கழிப்பிட வசதி,மருத்துவம் மற்றும் மருந்தக வசதி, ஓட்டுநர், நடத்துநர்களுக்கான ஓய்வறை, தீயணைப்புத் துறை வாகனங்கள், புறக்காவல் நிலையம், பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது என சேகர் பாபு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.