சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை முன்பு நலம்பெற வேண்டி காத்திருந்த தொண்டர்கள் கேப்டன்... கேப்டன்... என தொண்டர்கள் கதறி அழுதனர்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
இதையும் படிக்க | தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: கதறிய தொண்டர்கள்!
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை(டிச.26) மாலை அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான பரிசோதனையின் முடிவில் விஜயகாந்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை கொடுக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விஜயகாந்தின் உடல் அவருடைய சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர் தேமுதிக அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். பின்னர் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவைக்குச் சென்றார். பின்னர் பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார்.
2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவருக்கு உடல்நிலை, அரசியல் என தொடர்ந்து சறுக்கல் ஏற்பட்டது.
உடல்நிலை பாதிப்பை அடுத்து வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி செயல்பட்டு வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது தொண்டர்களையும் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை அடுத்து மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் கேப்டன்...கேப்டன் என கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
விஜயகாந்த் மறைவை அடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.