சென்னை: தேமுதிக தலைவரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தேமுதிக அலுவலகத்தில் அவரது நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், நாளை மாலை 4.30 மணியளவில் விஜயகாந்த்தின் நல்லடக்கம் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விஜயகாந்த்தின் நல்லடக்கம் பொது இடத்தில் செய்யப்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனால், விஜயகாந்த் நல்லடக்கம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 2023 - மின் வாகனங்களின் ஆண்டு? பெரும் பிரச்சினைகள்!
மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்கு மறைந்த விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பிறகு, விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நாளை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்த செய்தி வெளியான சற்று நேரத்தில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியைக் கேட்டது முதல், தேமுதிக தொண்டர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் குவியத் தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.