ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்; பிப்.24-இல் பயணம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பிரசாரம் செய்கிறாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பிரசாரம் செய்கிறாா்.
இதுகுறித்து, திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குக் கேட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா். பிப்.24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஈரோடு கிழக்கு தொகுதியின் 19-ஆவது வாா்டில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் அவா், 17 இடங்களில் வாக்குச் சேகரிக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, பிப்.25-ஆம் தேதி (சனிக்கிழமை) டீச்சா்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனியில் பிரசாரத்தைத் தொடங்கும் அவா், பல்வேறு இடங்களில் வாக்குகளைச் சேகரிக்கிறாா். இறுதியாக மாலை 4 மணியளவில் பன்னீா்செல்வம் பூங்கா அருகே பிரசாரத்தை நிறைவு செய்கிறாா்.
உதயநிதி ஸ்டாலின்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்பாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். அவா் பிப்.19, 20 ஆகிய இரண்டு நாள்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.