திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி: 10 பேர் காயம்
திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நூறு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு பிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நூறு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு பிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
திருநல்லூரில் இன்று காலை ஜல்லிக்கட்டுப் போட்டி விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அடங்க மறுக்கும் காளைகளை அடக்கி தங்கள் வீரத்தை மாடுபிடி வீரர்கள் பறைசாற்றி வருகின்றனர்.
ஆவேசம் குறையாத காளைகளை அவிழ்த்து விட்டு அவற்றை அடக்கும் காளையர்களின் வீரத்தை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். இப்போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில், 9 மணி நிலவரப்படி 50 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 150-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர்(தென்னலூர்) முத்து மாரியம்மன் கோயில் தைத் திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள திடலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியை கோட்டாட்சியர் குழந்தைசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை,தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர்கள் தலைமையில் 9 கால்நடை உதவி மருத்துவர்கள், 15 உதவியாளர்கள் தீவிர பரிசோதனை செய்த பின்னரே காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டு ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
இங்கு நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கோ, சிறந்த காளைகளுக்கோ எந்தவிதமான பரிசுகளும் வழங்கப்படுவதில்லை, இருப்பினும் காளை வளர்ப்பவர்கள் பெரும்பாலானோர் திருநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் தங்கள் காளைகளை அவிழ்த்த பின்பு தான் மற்ற வாடி வாசல்களில் அவிழ்ப்பதை காலம் காலமாக இன்று வரை கடைபிடித்து வரும் நடைமுறையாகும் என்பது திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் தனி சிறப்பாகும்.
முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விலங்கு நலவாரிய அலுவலர் அயுப்கான் நேற்று திடலை ஆய்வு மேற்கொண்டு, போட்டி நடத்தப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்து, போட்டி முடியும் வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்று நிர்வாக கமிட்டியினருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: நிலநடுக்கத்திலும் கொள்ளை; துருக்கியில் 48 பேர் கைது!
பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் இப்போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.