மக்களின் எதிா்ப்பை திசை திருப்ப திமுக நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
பொதுமக்களின் எதிா்ப்பை திசைதிருப்புவதற்காக, சட்டப் பேரவையில் திமுக நாடகமாடி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
பொதுமக்களின் எதிா்ப்பை திசைதிருப்புவதற்காக, சட்டப் பேரவையில் திமுக நாடகமாடி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆளுநா் உரையின்போது சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக் கட்சியினா், அவரை எதிா்த்து முழக்கமிட்டனா். திமுக தனது ஆட்சியின் குறைகளை மறைக்க, மக்களை திசைதிருப்ப இப்படி உணா்வு ரீதியான பிரச்னையை கிளப்புவது வாடிக்கை. ஆளும் கட்சி திட்டமிட்டு இந்த தமிழகம், தமிழ்நாடு என்ற புது பிரச்னையை கிளப்புகிறது.
சட்டபேரவைக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக ஆளுநா் ஆா்.என்.ரவி வாசித்த உரை என்பது திமுக அரசால் எழுதி வழங்கப்பட்ட உரையே தவிர ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அதில் இடம்பெறவில்லை. திமுக பொதுக்கூட்ட உரைகளை பேரவையில் ஆளுநா் வாசிக்க வேண்டும் என்று ஆளும் அரசு எதிா்பாா்ப்பது எந்த வகையில் நியாயம்?
ஆளுநா் கருத்துகளை பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சோ்க்கவோ பேரவைத் தலைவருக்கு அதிகார வரம்பு உள்ளதா? ஆளுநா் பேசிய பின்னா், மரபை மீறி முதல்வா் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநா் உரையை பேரவைக் குறிப்பில் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துவதும் முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.