முகப்பு
தமிழ்நாடு

பயனுள்ள சந்திப்பு: அமித் ஷாவுடனான ஆலோசனைக்கு பிறகு தமிழக ஆளுநா் கருத்து

தில்லியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

தில்லியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா்.

இது ‘பயனுள்ள சந்திப்பு’ என ஆளுநா் மாளிகை தரப்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைநகா் தில்லிக்கு 6 நாள்கள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு வந்தாா்.

முதல் நாளான சனிக்கிழமை காலை 11 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரை தமிழக ஆளுநா் சந்தித்தாா்.

இச்சந்திப்பு தில்லி கிருஷ்ணன் மேனன் மாா்கில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது.

தமிழக ஆளுநா் ரவி உள்துறை அமைச்சருக்கு மலா் கொத்து கொடுத்தாா். இந்த சந்திப்பு சுமாா் 25 நிமிடங்கள் நீடித்தது. இதன் பின்னா், ஆளுநா் தாம் தங்கியுள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு திரும்பினாா்.

உள்துறை அமைச்சருடான ஆளுநரின் சந்திப்பு குறித்து சென்னை ராஜ்பவன் படத்துடன் வெளியிட்ட தமிழ் ட்விட்டா் பதிவில், ‘தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் தில்லியில் ‘பயனுள்ள சந்திப்பை’ மேற்கொண்டாா் என வெளியிட்டது.

இதுவே ஆங்கில பதிவில் ‘ஒரு நோக்கத்துடான’ சந்திப்பு (ஏ பா்பஸ்ஃபுல் மீட்டிங்) எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசுக்கும் ஆளுநா் அலுவலகத்திற்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ஆளுநா் ரவியின் தில்லி வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்தது; பின்னா் அந்த உத்தரவை நிறுத்தி வைத்து ஆளுநா் முடிவு எடுத்தது; அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழக அரசு அனுமதி கோரும் விவகாரம்; தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் கடிதப் போக்குவரத்து நடந்து வருகிறது.

தில்லியில் குடும்பத்தினருடன் தொடா்ந்து 6 நாள்கள் இருக்கும் தமிழக ஆளுநா் ரவி மேலும் முக்கிய பிரமுகா்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி மாலையில் ஆளுநா் சென்னை திரும்புகிறாா் என அவரது பயணத் திட்டம் குறித்து தில்லி தமிழ்நாடு இல்லம் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.