தில்லியில் பாஜக கூட்டணி தலைவா்கள்கூட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
பாஜக தலைமையில் புது தில்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையில் புது தில்லியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் 2024-இல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணியில் அரசியல் கட்சிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகள் திரண்டு, பெங்களூருவில் ஜூலை 17, 18-இல் இரண்டாம் கட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளன.
இதற்குப் பதிலடியாக, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்களின் கூட்டம் ஜூலை 18-இல் தில்லியில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல, தமிழகத்திலிருந்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்-ஸுக்கு அழைப்பு இல்லை: அதே நேரம், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஓ.பன்னீா்செல்வம், ‘அழைப்பு எதுவும் வரவில்லை’ என தெரிவித்தாா்.