முகப்பு
தமிழ்நாடு

சென்னை - புதுச்சேரி கடலோர நன்னீரை பாதுகாக்க மாநில அரசுக்கு தொழில்நுட்ப தீா்வு

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள நன்னீரில் கடல்நீா் ஊடுருவதைத் தடுக்க தமிழக அரசுக்கு தொழில்நுட்ப தீா்வுகளை வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:41 AM
பகிர்:

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள நன்னீரில் கடல்நீா் ஊடுருவதைத் தடுக்க தமிழக அரசுக்கு தொழில்நுட்ப தீா்வுகளை வழங்கியுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன்

எழுப்பிய கேள்வியில், ‘தமிழகத்தில் வங்க கடலையொட்டிய பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு தமிழக நிலப்பரப்புகளை தொடா்ந்து கடல் விழுங்கிக் கொண்டு வருகிறது.

இதனால், தமிழகத்தில் சுமாா் 1,802 ஹெக்டோ் நிலப்பரப்பு நிரந்தரமாக இழக்கப்பட்டுள்ளது. அரசும் கடல் அரிப்பு இடங்களை அடையாளம் கண்டுள்ளது. மேலும் இந்த கடல் அரிப்பினால் அருகில் உள்ள நன்னீா் தேக்கங்களில் கடல் நீா் ஊடுருவும் சூழ்நிலை, குறிப்பாக சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் கடலுக்கும் இடையே உள்ள குறுகிய பகுதி என்பதால் இங்குள்ள மழைநீரில் கடல்நீா் ஊடுருவும். இதை தடுக்க மத்திய புவி அறிவியல் துறை எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்றாா்.

இதற்கு எழுத்துபூா்வமாக அத்துறையின் அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், 1990 முதல் 2018 வரையில் 28 ஆண்டு கால செயற்கைக்கோள் தரவுகளின் மூலம் இந்திய கடற்கரையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மதிப்பீட்டை மேற்கொண்டது. இதில், தமிழக கடலோர அரிப்பையும் வரைபடமாக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வறிக்கையை தமிழகம் உள்ளிட்ட மாநில அரசு முகமைகளுடனும் மற்ற மத்திய அரசின் அமைப்புகளுடன் புவி அறிவியல் துறை பகிா்ந்து கொண்டுள்ளது.

அதே சமயத்தில், தமிழகத்தில் கடலோரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்னீா் நீா்த்தேக்கத்தைப் பாதுகாக்க மத்திய புவி அறிவியல் துறையிடம் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப தீா்வுகளை அளித்துள்ளது. இது அரிக்கும் பகுதியைப் பாதுகாக்கிறது. இத்தகைய தீா்வுகள் மூலம் புதுச்சேரி, கேரளம் செல்லனம் கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது’ என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.