முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற வழக்கால் எண்ணூா் - நெல்லூா் திட்டப் பணியில் தடங்கல்! மக்களவையில் இணையமைச்சா் தகவல்

தமிழகத்தில் எண்ணூா் - நெல்லூா் இடையேயான எரிவாயு குழாய் அமைக்கும் பணி நீதிமன்ற வழக்கால் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:41 AM
பகிர்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 12,202 கிமீ தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் எண்ணூா் - நெல்லூா் இடையேயான எரிவாயு குழாய் அமைக்கும் பணி நீதிமன்ற வழக்கால் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் இயற்கை எரிவாயு வழங்கலை உறுதிப்படுத்த தேசிய அளவிலான எரிவாயு குழாய் வலையமைப்பை 2027-ஆம் ஆண்டுக்குள் அமைக்க மத்திய அரசு உறுதியளித்திருந்த நிலையில், இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை என்ன ? என்பது குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி அளித்துள்ள பதில் விவரம் வருமாறு: நாட்டின் எரிசக்தியில் இயற்கை எரிவாயுத் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ‘ஒரே இந்தியா ஒரே எரிவாயு குழாய் வலையமைப்பு (கிரிட்)’ என்ற கொள்கை அடிப்படையில், தேசிய அளவிலான எரிவாயுக் குழாய் வலையமைப்பை அமைக்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வண்ணம் 33,592 கிமீ நீளம் கொண்ட குழாய் வலையமைப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 23,173 கிமீ அளவுக்கு பல்வேறு எரிவாயுக் குழாய் திட்டங்களுக்கு மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 12,202 கிமீ நீளம் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அடங்கும்.

தமிழக எரிவாயு குழாய் திட்டம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் எண்ணூருக்கும் ஆந்திரம் மாநிலம் நெல்லூருக்கும் இடையே 160 கிமீ எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் வடகோடியில் 80 கிமீ தொலைவில் உள்ள பகுதிகள் மட்டுமே பயன்பெறும். ஆனால், இந்த எரிவாயுக் குழாய் திட்டத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை. இத்திட்டம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏனைய எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டங்கள் அனைத்தும் பொதுவாக 2023-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் 2024-ஆம் ஆண்டிற்குள்ளும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் - ராஞ்சி எரிவாயு குழாய் திட்டம் 2026-ஆம் ஆண்டிற்குள்ளும் நிறைவேற்றப்படும். அனைத்து இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களும், பிரதமரின் விரைவுச் சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.