தமிழ்நாடு

எப்போதும் கோளாறுதான்.. கொந்தளித்த வடசென்னை மக்கள்

DIN

சென்னை: சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் குறித்த நேரத்தில் கிளம்பி திட்டமிட்டபடி சென்றடைவது என்பது இயலாத விஷயம்.
 
எப்போதுமே காலதாமதம் என்பது தவிர்க்க முடியாதது  என பயணிகள் அறிந்திருந்தாலும், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னையை அடைய வேறு சிறந்த வழி இல்லை என்பதாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் சென்டிரல் ரயில் நிலையத்தில் கால் கடுக்க கும்மிடிப்பூண்டி ரயிலுக்காகக் காத்திருப்பது வழக்கம்.

சென்னை சென்டிரலில் இருந்து, திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி  வரையிலும், ஒரு சில ரயில்கள் சூலூர்பேட்டை, நெல்லூர் வரையிலும் நாள்தோறும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலைக்கு வருகிறார்கள்.

மற்ற ரயில்ப் பாதைகளை விடவும், இந்த வழித்தடத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதும், சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தில் வரும் ரயில்களுக்காக, சில மணி நேரம் பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதும் வழக்கமாகத் தொடரும் துயரங்கள்தான்.

அந்த வகையில், புதன்கிழமை காலை, வழக்கம் போல பணிக்கு வர இந்த புறநகர் வழித்தடங்களில் ரயில் ஏறியவர்களுக்கும் சரி, ரயில் பிடிக்க நிலையங்களுக்கு வந்தவர்களும் சரி.. கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

இன்று காலை 6.30 மணிக்கு பயணிகள் ரயில் ஒன்று எண்ணூர் ரயில் நிலையம் அருகே வந்த போது உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அதன்பிறகு வந்த பயணிகள் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இது தொடர்பாக ரயில்வேயிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள், பொன்னேரி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி நின்று பயணிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எண்ணூர், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் ரயிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறினர்.

சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையில் நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் தற்போது மூன்று பாதைகள் இருப்பதால்தான் இவ்வாறு அடிக்கடி பிரச்னை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT