சென்னை: ஐஎஃப்எஸ் நிறுவன மோசடி வழக்கில், ரூ.550 கோடி வசூல் செய்து கொடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ்- இன்டர்நேஷ்னல் ஃபைனான்சியல் சர்வீஸ் (ஐஎஃப்எஸ்) என்ற நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.8 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியது. இதன் விளைவாக, அந்த நிறுவனத்தில் 84 ஆயிரம் பேர் ரூ. 5 ஆயிரத்து 900 கோடி முதலீடு செய்தனர்.
ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக அந்த நிறுவனத்தின் மீது தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இப்புகார்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது மோசடி உள்ளிட்ட 9 பிரிவுகளின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அப்பிரிவு போலீஸார், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், முகவர்கள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். இச்சோதனை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் 21 இடங்களில் நடைபெற்றது. சோதனையில் 220 முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க், 13 கணினிகள், 5 மடிக்கணினிகள், 14 கைப்பேசிகள், 40 பவுன் தங்க நகைகள், ஒரு கார், ரூ.1 கோடியே 5 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும் 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ. 121 கோடி பணம் முடக்கப்பட்டது. மேலும் ரூ. 39 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பிரதான முகவராக செயல்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த ச.ஹேமந்திரகுமார் (47) கைது செய்யப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இவர் சுமார் 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூல் செய்து அந்த நிறுவனத்திடம் வழங்கியதாக பொருளாதார குற்றப்பிரிவினர் தெரவித்தனர். ஹேமந்திரகுமார் தமிழக காவல்துறையில் காவலராக பணியாற்றியவர் என்றும் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.