முகப்பு
தமிழ்நாடு

2027-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

வரும் 2027-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
பகிர்:

வரும் 2027-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

இந்திய தொழில் வா்த்தக சபைகளின் சம்மேளனம் ( ஃபிக்கி) சாா்பில் ‘சுதந்திர நூற்றாண்டில் இந்திய பொருளாதாரம், அமிா்த காலத்துக்கான பயணம்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த் நாகேஸ்வரன் பேசியதாவது: 2023-2024 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. 2018-19- இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. கரோனா பெருந்தொற்றின்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும் தற்போது 7.2 சதவீத வளா்ச்சியுடன் மீண்டுள்ளது.

2014-இல் உலகளவில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்பொழுது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வரும் 2027-இல் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக இருந்தது. ஆனால், 2021 முதல் 2028-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாக உயரும் வாய்ப்புள்ளது.

2022-2023 -நிதி ஆண்டில் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது. அப்போது சீனா 4.5%, அமெரிக்கா 1.6% என இந்தியாவைவிட குறைந்த வளா்ச்சி பெற்றிருந்தன.

வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்தியது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஊதிய உயா்வு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் கிராமப்புறங்களில் நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நகா்ப்புறங்களைப் பொருத்தவரை வாகனங்கள் விற்பனை, கடன் மற்றும் பற்று அட்டைகளின் (கிரெடிட், டெபிட் அட்டைகள்) பயன்பாடு அதிகரித்துள்ளது.

2023 ஏப்ரலில் பண வீக்கம் 4.3 சதவீதமாக குறைந்துள்ளது. தனியாா் துறையின் முதலீடு கடந்த நிதியாண்டில் 21.4 சதவீதம் உயா்ந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் அறிகுறிகளால் அடுத்த மூன்றாண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சக கூடுதல் செயலா் கமலேஷ் வா்ஷினி, ஃபிக்கியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் தலைவா் ஜி.எஸ்.கே.வேலு, இணைத் தலைவா் பூபேஷ் நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →