திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோடைக்காலம் முடிந்த நிலையிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த வெயில் காரணமாக பகலில் பொதுமக்கள் நாடமாட்டமின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
இதற்கிடையே தென்மேற்கு அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், தொடர்ந்து திங்கள்கிழமையும் விடாமல் மழை பெய்து வருகிறது. இதேபோல், திருவள்ளூர், பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூர், செங்குன்றம், மணவாளநகர், அரண்வாயல் குப்பம், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, சிவன்வாயல், ஈக்காடு, பூண்டி, கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.
இந்த மழையால் வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதாலும், விளைநிலங்களில் பயிரிட்ட பயிர்கள் செழிப்பாக வளரும் என்பதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே இந்த மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: திருவள்ளூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பதிவான மழை அளவு(மி.மீ) அளவு விவரம். ஜமீன்கொரட்டூர்-84, பூந்தமல்லி-74, ஆவடி-28, செங்குன்றம்-25, தாமரைபாக்கம், சோழவரம் தலா-16, திருவள்ளூர்-15, பொன்னேரி-13, ஊத்துக்கோட்டை-9, திருவாலங்காடு-6, ஆர்.கே.பேட்டை-5, திருத்தணி, பூண்டி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு தலா-3 என மொத்தம் 303 மி.மீட்டரும், சராசரியாக-20.20 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இதில் ஜமீன் கொரட்டூர், பூந்தமல்லியில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.