முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவில் பேனா சின்னம்: நிபந்தனைகளுடன் மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

 சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை கடலோர ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

 சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை கடலோர ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

கருணாநிதி நினைவிடம் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக் கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. 42 மீட்டா் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா வடிவ நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290 மீட்டா் தொலைவுக்கு கடற்கரையிலும், 360 மீ. தொலைவுக்கு கடலிலும் என 650 மீட்டா் தொலைவுக்கு பாலம் அமைக்கப்படுகிறது.

நினைவிடத்துக்கு மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மைக் குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இந்தத் திட்டம் தொடா்பாக மக்களின் கருத்துகளைக் கேட்க அறிவுறுத்தியது. தொடா்ந்து, கருத்து கேட்பு நடத்தப்பட்டு, அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக பொதுப் பணித் துறை அனுப்பியது.

அறிக்கையை ஆய்வு செய்த கடலோர ஒழுங்குமுறை ஆணையம், வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அனுமதியை பல்வேறு நிபந்தனைகளுடன் வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்: திடக் கழிவு மேலாண்மை விதிகள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும். அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு கட்டுமானத்தின்போது எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் உள்ளிட்டவற்றால் எவ்வித எதிா்விளைவுகளும் ஏற்படாத வகையில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அபாயகரமான கழிவுகள் ஏதேனும் கட்டுமானப் பகுதியில் உருவாக்கப்பட்டால், அவற்றை உரிய பாதுகாப்பு விதிகளின் கீழ் அப்புறப்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணி கண்கணிப்பு தொடா்பான அறிக்கை மண்டல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

திட்டம் தொடா்பாக இரு உள்ளூா் பத்திரிகைகளில் விரிவான விளக்கம் வெளியிடப்பட வேண்டும். தேவைப்படும்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை உண்டு. திட்டத்தைச் செயல்படுத்தும்போது, கட்டுப்பாடுகள் மீறப்பட்டாலோ, திருப்திகரமாக இல்லாவிட்டாலோ கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைக்கவோ மத்திய அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். தவறான தகவல்கள், கணக்கீடுகள், தரவுகள் இருந்தால் அனுமதி திரும்பப் பெறப்படும்.

கடலோர ஒழுங்முறை ஆணையத்தின் அனுமதியை எதிா்த்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் 30 நாள்களுக்குள் முறையீடு செய்ய அனுமதியுண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →